கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட கடைமடை விவசாயிகளுக்கு வரமாய் வந்திருக்கும் மழை, சாபமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேட்டூர் அணை ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்படாததால் இந்தாண்டு குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்துப் போனது. அதன் பிறகு காலதாமதமாக மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் ஒரு மாத காலத்திற்கு மேலாகியும் கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக காவிரி நீர் வந்து சேரவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் கடைமடைப்பகுதி விவசாயிகள் நிலங்களை உழுது விதைகளை தெளித்தனர்.
தண்ணீர் இல்லாததால் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்களில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர். பொதுவாக நாகை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெறுவது வழக்கம். ஆனால் அதையும் தாண்டி இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதற்கான விதைகள், உரங்கள் தயார் நிலையில் இருந்தும் தண்ணீர் இல்லாததால் உழுது போட்ட நிலங்கள் உதவாமலேயே இருந்து வந்தது.
முதல் முறையாக விதைத்த நெல் மணிகள் முளைக்காததால் மீண்டும் வயல்களில் விதை நெல்லை தெளித்து விவசாயிகள் காத்திருந்தனர். இந்நிலையில் நாகப்பட்டினம், திருப்பூண்டி , கீழ்வேளூர், திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்தது.
இந்த மழை, முளைத்து கருகும் நிலையில் வானம் பார்த்து காத்திருந்த நெற்பயிர்களுக்கு உயிர் துளியாய் அமைந்தது. ஆனால் இந்த மழை நீடித்தால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மகிழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மரியதாஸ் கூறுகையில், மழை வருமா என்று ஏங்கி இருந்த எங்களுக்கு தற்போது பெய்யும் மழையால் விதைகள் முளைத்து பயிராகி செழித்து வளர்வதற்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
ஆனாலும் இந்த மழை நீடித்தால் சிறிய அளவே முளைத்து வளர்ந்துள்ள நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்படும்" என்று கவலையுடன் தெரிவித்தார்.
விவசாய சங்க தலைவர் துரைராஜ் பேசும்போது, "இந்த மழை நீடித்துப் பெய்தால் தங்களுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 வரை நஷ்டம் ஏற்படும். ஏற்கனவே குறுவை சாகுபடி இல்லாத நிலையில் வட்டிக்கு கடன் வாங்கி விதைத்த நெல் விதைகள் தற்போது மழை நீரில் மூழ்கி வீணாகி விடுமோ என்று அச்சம் ஏற்பட்டு உள்ளது’’ என்றார்.
4 நாட்களாக தொடர்ந்து பெய்யும் கனமழையால் வயல்களில் தெளிக்கப்பட்டுள்ள விதை நெல்லும், சற்று முளைத்துள்ள பயிர்களும் மூழ்கி இருப்பதால், வயல்களில் நிரம்பி உள்ள தண்ணீரை வடகால் வாய்க்கால்களில் வடிய வைக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.